தி. கிரிஷன்
புக்கிட் மெர்தாஜம் ஜன 23-ஐயா நீங்க எங்களுக்கு அப்பா மாதிரி ஐயா என தமது தந்தையைப் போல பயிற்சி ஆசிரியர்களை அரவணைத்து நற்சிந்தனைகளை விதைத்த ஆசிரியர் கல்விக் கழகம் துவான்கு பைனூன் வளாக முன்னாள் தமிழ் ஆய்வியல் துறைத் தலைவர் திரு சாமிநாதன் அவர்களுக்கு அன்பு வாசகத்தால் மனம் உருக வைத்தனர் பயிற்சி ஆசிரியர்கள். ஆனந்த கண்ணீரில் மூழ்கினார் திரு சாமிநாதன் கோவிந்தசாமி அவர்கள்.

கடந்த வெள்ளிக்கிழமை ஆசிரியர் கல்விக் கழகம் துவான்கு பைனூன் தமிழாய்வியல் துறை முன்னாள் தலைவராகப் பணியாற்றிய ஐயா திரு சாமிநாதன் கோவிந்தசாமி அவர்களுக்கும் பணி ஓய்வுக்கான விடுமுறையில் உள்ள துணைத்தலைவர் திரு சேகரன் முத்தப்பன் அவர்களுக்கும் விடைதரு விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவ்விடைதரு விழாவில் ஐயா திரு சாமிநாதன் கோவிந்தசாமி அவர்களின் நண்பரும் ஈப்போ வளாகத் தமிழ்ப் பிரிவின் முன்னாள் தலைவரும் மலேசிய முருகப் பக்திப் பேரவையின் துணைத்தலைவருமாகிய முனைவர் சேகர் நாராயணன் அவர்களும், ஆசிரியர் கல்விக் கழகம் துவான்கு பைனூன் வளாக தமிழப்பிரிவின் முன்னாள் தலைவர் ஐயா திரு ராஜாலிங்கம் அவர்களும் ஐயா திரு சேகரன் அவர்களின் நண்பர் திரு வடிவேலு வைத்தியலிங்கம் அவர்களும் முன்னாள் தமிழ் ஆய்வியல் துறையின் விரிவுரையாளர் முனைவர் பாலு சுப்ரமணியம் அவர்களும், டத்தீன் அல்லிமாலை அவர்களும் திருமதி விக்னேஸ்வரி சகாதேவன் அவர்களும் ஈப்போ வளாக தமிழப்பிரிவு விரிவுரையாளர் முனைவர் பார்வதி வெள்ளச்சாமி அவர்களும் வருகை புரிந்தனர்.

திரு சாமிநாதன் அவர்கள் தமிழாய்வியல் துறைத் தலைவர் என்ற நிலையில் மட்டுமல்லாமல் தமிழினம், தமிழ்மொழி, தமிழ்ப்பண்பாடு, தமிழ்ப்பள்ளி என அனைத்திற்கும் பெரிதளவில் சேவையாற்றியுள்ளார். இன்று மலேசியாவில் எந்தவொரு தமிழ்ப்பள்ளிக்குச் சென்றாலும் அங்கு இவரைத் தெரியாதவர்கள் எவரும் இல்லை என்றே கூறலாம். இவர் தமிழ்மொழி பாடநூல் பிரிவு, தமிழ்மொழிக் கலைத்திட்டக் கல்வி மேம்பாட்டு பிரிவு, தேர்வு இலாக்கா போன்றவற்றிலும் தமது தலையாயப் பங்கை இன்றளவும் ஆற்றியுள்ளார். இவரின் சேவை தேசிய அளவில் உயர்ந்துள்ளது என்று இன்றைய தமிழாய்வியல் துறைத் தலைவர் திரு மணிமாறன் கோவிந்தசாமி அவர்கள் திரு சாமிநாதன் அவர்களின் பெருமையைப் பறைசாற்றினார்.

அவரையடுத்து திரு சேகரன் முத்தப்பன் அவர்கள் நாடு தழுவிய நிலையில் தொடக்கப்பள்ளி, இடைநிலைப் பள்ளிகளுக்கான வினாத் தயாரிப்புப் பட்டறைகளை நடத்துவதில் வல்லமைக் கொண்டவராகவும், சுல்தான் இட்ரீஸ் கல்வியியல் பல்கலைக்கழகத் தமிழ்மொழி ஆய்வுப் பிரிவின் தமிழ்க்கல்வி ஆய்விதழின் துணைப் பதிப்பாசிரியராகவும் இருந்த இவர் கல்வி அமைச்சில் சிறந்த சேவை ஆற்றியமைக்காக இரண்டு முறை சிறந்த சேவையாளர் விருதுகளைப் பெற்றுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஐயா திரு சாமிநாதன் அவர்கள் கற்றல் கற்பித்தலின்போது கண்டிப்பும் நகைச்சுவையும் கலந்தே இருக்கும். பாடப்பொருள்களை மட்டும் கற்பிக்காமல் பொது அறிவையும் அவ்வப்போது புகுட்டுவது இவரின் இயல்பு. ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கே உன்னை அர்ப்பணி எனும் பொன்மொழியைப் பயிற்சி ஆசிரியர்களின் மனத்தில் பசுமரத்தாணிபோல் பதிய வைத்தார் எனக் கூறினால் அது மிகையாகாது.
அதே போல ஐயா சேகரன் முத்தப்பன் அவர்கள் பயிற்சி ஆசிரியர்களுக்கு கற்பிக்கும் தோரணை பயிற்சி ஆசிரியர்களை வெகுவாகக் கவரும். கற்றல் கற்பித்தலின் பொழுது இவரது கண்டிப்பும், நகைச்சுவை கலந்த கருத்துரைத்தலும் மாணவர்களைப் வியப்புக்குள்ளாக்கும். பொதுத் தகவல்களையும் உலக நடப்புகளையும் புகுத்துவதில் இவர் வல்லமை கொண்டவர்.
இவர்கள் இருவரும் நம் துறைக்குக் கிடைத்த மாபெரும் சொத்து என்று தமிழ் ஆய்வியல் துறை தலைவர் மேலும் பகன்றார்.
37 total views, 1 views today