தொழிலாளர்களின் அர்ப்பணிப்பிற்கு மதிப்பளிக்க வேண்டும்
பெட்டாலிங் ஜெயா மே 1இந்நாட்டிலுள்ள முதலாளிகள் தங்கள் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பிற்கு மதிப்பளிக்க வேண்டும் என முன்னாள் மனிதவள அமைச்சர் எம். குலசேகரன் தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தியில் கூறினார். நாட்டின் முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சி தொழிலாளர்களின் அர்ப்பணிப்பால் தான் என்பதை அரசாங்கம் மற்றும் முதலாளிகள் மறந்து விடக்கூடாது என்றார் அவர். தொழிலாளர்கள் வியர்வை சிந்தி உழைப்பதால் தான் முதலாளிகள் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர் என்ற உண்மையை மறந்து விடக்கூடாது என்றார் அவர்.மே மாதம் முதல் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச சம்பளம் வெ 1,500 வழங்கப்படும் என்ற உறுதிமொழியைப் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி மற்றும் நடப்பு மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் மறந்து விடக்கூடாது எனப் பாக்காத்தான் ஹராப்பான் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் நினைவுறுத்தினார். பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் தனது 22 மாத ஆட்சியில் தொழிலாளர்களின் நலன்களைப் பராமரித்து வந்தது என்றார் அவர்.இந்த நடப்பு அரசாங்கம் தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பள விவகாரத்தில் தனது உறுதிமொழியைக் காப்பாற்ற வேண்டும் என அவர் சொன்னார். மேலும் மிகவும் சர்ச்சையாகி வரும் கட்டாயத் தொழிலாளர்கள் பிரச்சினைக்கு இந்த அரசாங்கம் ஒரு நிரந்தரத் தீர்வை காண வேண்டும் என ஜசெக உதவித் தலைவருமான அவர் குறிப்பிட்டார். இந்தக் கட்டாயத் தொழிலாளர்கள் பிரச்சனை நீடித்தால் நாட்டின் பொருளாதாரம் மோசமடையும் என அவர் சொன்னார். கட்டாயத் தொழிலாளர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காணாவிட்டால் அமெரிக்கா போன்ற நாடுகள் மலேசியாவின் இறக்குமதி பொருட்களுக்குத் தடைவிதிக்கும் எனக் குலா சுட்டிக்காட்டினார். 192 total views