English Tamil Malay

மனோபாலா குடும்மபத்தினருக்கு அலை ஒளி ஊடகத்தின் ஆழ்ந்த் அனுதாபங்கள்.

அகல்யா
சென்னை, மே, 3 –
பிரபல நகைச்சுவை நடிகரும் தமிழ்த் திரைப்பட இயக்குநருமான நகைச்சுவை பூங்காற்று மனோபாலா உடல்நலக்குறைவு காரணமாக தனது 69ஆவது வயதில் காலமானார்.

நடிகர் மனோபாலா இறந்துவிட்டார் என்றச் செய்தி காட்டுத்தீப்போல் பரவியதை அறிந்த திரையுலக கலைஞர்கள் ஆழ்ந்த கவலையில் மூழ்கினர் அதே வேளையில் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

கடந்த ஒரு மாத காலமாக கல்லீரல் பிரச்சனைக்கு சிகிச்சை பெற்று வந்த மனோபாலா, சிகிச்சை பலனின்றி இன்று ( 3-5-2023 ) காலமானார். இரசிகர்களை சிரிக்க வைப்பவர்கள் எல்லாம் இப்படி அடுத்தடுத்து திடீர் திடீர் என்று இறப்பதை நினைக்கும்போதே நெஞ்சம் குமுறுகிறது என்று அண்மைய காலமாக கூறிவந்த மனோபாலா இன்று நம்மை மீளா துயரத்தில் ஆழ்த்தி விட்டார் என்று ரசிகர்களும், அவர் நண்பர்களும் கூறிவருகிறார்கள்.

நகைச்சுவை நடிகரான மயில்சாமி இறந்தபோது அவரின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு கொடுமை, கொடுமை என்றார் மனோபாலா. மயில்சாமியின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இத்துடன் நிறுத்திக்கொள் ஆண்டவா, போதும், தாங்க முடியாது என்றார். இந்நிலையில் அந்த மனோபாலாவே இன்று இல்லை என்பது பேரதிர்ச்சியாக இருக்கிறது.

இயக்குநராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் பின்னர் நடிகராகவும் தன்னை வளர்த்துக்கொண்டார்.
நகைச்சுவை கதாபாத்திரங்கள் அவருக்கு கை கொடுத்தது. தன் நகைச்சுவை காட்சிகளால் நம் கவலை எல்லாம் மறந்து சிரிக்கும்படி செய்தார் மனோபாலா என்றால் அது மிகையாகாது.

நிஜத்திலும் கலகலப்பானவர் மனோபாலா. யூடியூப் சேனல் வைத்து சுவாரஸ்யமான வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். ட்விட்டரில் எப்போதும் தொடர்பில் இருக்கும் அவர் ரசிகர்கள் ஏதாவது கேள்வி கேட்டு ட்வீட் செய்தால் உடனே பதில் அளிப்பார்.


தன் யூடியூப் சேனலுக்கு குறும்படங்களை அனுப்பி வைக்குமாறு கூறி மனோபாலா ட்வீட் செய்தார். அது தான் அவரின் கடைசி ட்வீட்டாக இருக்கும் என்பது தெரியாமல் போய்விட்டது. மயில்சாமி இறந்த பிறகு பழைய நினைவுகளை அசை போட்டு அது தொடர்பான புகைப்படங்களாக ட்விட்டரில் வெளியிட்டு தன் மகிழ்ச்சியை ரசிகர்களுடன் ஷேர் செய்து வந்தார்.
தன் குரு பாரதிராஜாவுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார். .

1982ம் ஆண்டு ரிலீஸான ஆகாய கங்கை படம் மூலம் இயக்குநர் ஆக மனோபாலா அறிமுகமானார் கேப்டன் விஜயகாந்தின் சிறைப்பறவை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஊர்க்காவலன், சத்யராஜின் மல்லுவேட்டி மைனர் உள்ளிட்ட பட படங்களை இயக்கியிருக்கிறார். அவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் நைனா. அவர் தமிழ் தவிர்த்து கன்னடம் மற்றும் இந்தி மொழியிலும் தலா ஒரு படம் இயக்கியிருக்கிறார்.

சிரஞ்சீவி நடிப்பில் வெளியான வால்டர் வீரய்யா தெலுங்கு படத்தில் நடித்திருந்தார் மனோபாலா. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ் படம் கோஷ்டி ஆகும்.
இயக்குநரும், நடிகருமான டி.பி. கஜேந்திரன், மயில்சாமி ஆகியோரின் மரணத்தின் பின் திரையுலகுக்கு மனோபாலாவின் திடீர் இழப்பு பேரதிர்ச்சியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 145 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *