தி. கிரிஷன்
பாயா பெசார், ஜூன் 17 – கடந்த 16/6/2024 ஞாயிற்றுக்கிழமையன்று கோ. சாரங்கபாணி தமிழ்ப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் திருமதி கு. செண்பகவள்ளி அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா காலை 8.30 தொடங்கி மதியம் 1.15 வரை பள்ளி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளியின் தலைமையாசிரியர், துணைதலைமையாசிரியர், மாணவர் நலத் துணைதலைமையாசிரியர், புறப்பாடத் துணைதலைமையாசிரியர் போன்றோர்களும் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் ஆசிரியர் கல்விக் கழகம் துவான்கு பைனூன், இராஜா மெலேவார், டாருலாமான் பயிற்றாசிரியர்களும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவிற்கு சிறப்பு முகாமையர்களாக பாடாங் மேஹா தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் திரு சுபாராவ், முன்னாள் கோ சாரங்கபாணி, வெல்லெஸ்லி, கணேசர் போன்ற தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியரும் ஆசிரியர் திருமதி கு. செண்பகவள்ளி அவர்களின் கணவருமான ஐயா திரு. முனுசாமி அவர்களும், புந்தார் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு முனியாண்டி அவர்களும், கெடா மாநில மூத்த எழுத்தாளர் திரு கோ. புண்ணியவான் அவர்களும், கோ சாரங்கபாணி தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும், பணி ஓய்வு பெற்ற ஆசிரியர் சரஸ்வதி அவர்களும், ஆசிரியர் திருமதி கு. செண்பகவள்ளி அவர்களின் உற்ற தோழர்கள் ஆசிரியர் திருமதி சசிகலா அவர்களும் ஆசிரியர் சந்திரகுமாரி அவர்களும் வருகை புரிந்தனர்.

இவ்விழாவில் மாணவர் பிரதிநிதி உரையினைச் செல்வி கலினியா அவர்கள் ஆற்றினார். ஆசிரியர் கு. செண்பகவள்ளி அவர்களுக்குப் பள்ளி மாணவர் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், கோ சாரங்கபாணி தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் குமாரி நவமணி அவர்கள் தமதுரையில் ஆசிரியர் திருமதி கு. செண்பகவள்ளி பள்ளிக்கு ஆற்றிய சேவையினை நினைவுக் கூர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து ஆசிரியர் பிரதிநிதி உரையினை கோ சாரங்கபாணியின் ஆங்கில மொழி ஆசிரியர் திருமதி வட்சலா தேவி அவர்கள் ஆற்றினார். கோ சாரங்கபாணியில் ஆசிரியர் கு. செண்பகவள்ளி பணியாற்றுவதற்கு முன்னரே அவரிடம் தாம் நட்புறவு கொண்டதாகவும் ஆங்கில மொழி பாடத்திற்கு உட்பட்ட பாடத் துணைபொருள்களைப் பகிர்ந்து கொள்வோம் என்றும் தமதுரையில் பகிர்ந்தார்.

மேலும், ஆசிரியர் கு. செண்பகவள்ளி அவர்கள் தமதுரையில் இவ்விழாவை ஏற்பாடு செய்த பள்ளி நிர்வாகத்திற்கு நாவினிக்க நல்லதொரு தமிழில் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். மாணவர்களுக்குக் கல்வியின் அவசியத்தைப் பற்றி சிறு விளக்கம் அளித்தார்.

ஆசிரியர் திருமதி கு. செண்பகவள்ளி அவர்களின் வாழ்க்கைக் குறிப்பின் அடிப்படையில் இவர் 18/6/1964 நாளன்று திருவாளர் குன்னிமார்த்தன் – திருமதி செண்பாயி அவர்களின் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தவராவார் . இவர் தமது ஆரம்பக் கல்வியினை ஸ்ரீ லங்காட் தேசியப் பள்ளியிலும் சுல்தான் அப்துல் சாமாட் இடைநிலைப்பள்ளியிலும் தொடர்ந்தார். 1987ஆம் ஆண்டு ஜொகூர் மாநிலத்திலுள்ள முகம்மது காலிட் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் தமது ஆங்கில மொழிக்கான பயிற்சியினைச் சிறப்பாகச் செய்தும் முடித்தார்.

4/1/1988 ஆம் நாளன்று பந்திங் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சன்டிங் தேசியப் பள்ளியில் தமது பணியினை மேற்கொண்டார். தொடர்ந்து, ஸ்ரீ லங்காத் தேசியப் பள்ளியிலும், தேசிய வகை விக்டோரியா தோட்டத் தமிழ்ப்பள்ளியிலும், தேசிய வகை பாடாங் மேஹா தோட்டத் தமிழ்ப்பள்ளியிலும் இறுதியாக, கோ சாரங்கபாணி தமிழ்ப்பள்ளியில் பணியாற்றி இன்று பணி ஓய்வு பெறுகின்றார். 36 வருடக் காலம் ஆசிரியர் தொழிலில் பெரும் பங்கினை ஆற்றியுள்ளார் ஆசிரியர் செண்பகவள்ளி.
1/12/1997 ஆம் நாளன்று ஆசிரியர் செண்பகவள்ளி அவர்களுக்குத் திருவாளர் முனுசாமி என்பவருடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு ரூபன் என்ற புதல்வனும் உள்ளார். இவர் மகன் மலாயாப் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலாளர் துறையில் பட்டம் பெற்றுள்ளார். ஆசிரியர் திருமதி செண்பகவள்ளி 2004 முதல் 2006 ஆம் வரை மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் வரலாற்று பாடத்திற்கான இளங்கலைப் பட்டத்தினையும் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இக்கல்வித்துறையின் நீண்ட நெடிய பயணத்தில் இவர் அதிகமான மாணவர்களை மிகச்சிறந்த போதனைகள் வழி உயர்நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறார். அதோடு மட்டுமல்ல தன்னுடன் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு முன் உதாரணமாகவும் இருந்திருக்கிறார். மாந்தனாகப் பிறந்த ஒவ்வொருவரும் பயனான வாழ்க்கையில் வாழ்ந்து பிறரையும் பயன்மிகுவழிக்குக் கொண்டுவர வைப்பதே நியதி ஆகும். அப்பணியினை ஆசிரியர் திருமதி கு. செண்பகவள்ளி மிகச் சிறப்பாகச் செய்துள்ளார்.
அவ்வகையில் ஆசிரியர் திருமதி கு. செண்பகவள்ளி அவர்களுக்கு நன்றி கூறும் வகையில் கோ சாரங்கபாணி தமிழ்ப்பள்ளி பணி நிறைவு விழாவினை திட்டமிட்டப்படி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் வகுப்பு வாரியாக வகுப்பாசிரியர்கள், பள்ளி துப்புரவுப் பணியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர் ஆகியோர் ஆசிரியருக்கு நினைவு பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தனர்.
இவ்விழாவில் பள்ளி மாணவ மாணவியர் பணி நிறைவுப் பெற்ற ஆசிரியர் திருமதி கு. செண்பகவள்ளி அவர்களின் வாழ்த்தினைப் பெற்றனர். மேலும், பள்ளி ஆசிரியர்கள் அவருக்கு பொன்னாடைப் போர்த்தி மாலை அணிவித்து தங்களது பாராட்டினைத் தெரிவித்தனர். மதியம் மணி 1.15க்கு வழியனுப்பு விழாவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
81 total views, 1 views today