English Tamil Malay

(சத்யா பிரான்சிஸ்)

ஜார்ஜ்டவுன், ஜுலை.25 – மலேசிய திரைத்துரையில் புகழ்ப் பெற்ற இயக்குநரும், நடிகருமான காலம் சென்ற விஜயசிங்கம் கந்தசாமிக்கு பினாங்கில் நினைவஞ்சலிக் கூட்டம் நடந்தேறியது.


மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்ற முன்னாள் உறுப்பினர்கள் பேரவையின் பினாங்கு மாநிலத் தொடர்புக்குழு சார்பில் பினாங்கு கொம்தார் 5 வது மாடியில் உள்ள சிற்றரங்கில் , மாலை 7 மணியளவில் பினாங்கு மாநில கலைஞர்கள் மற்றும் அன்னாரின் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் மரைந்த உட்நாட்டு கலைஞருக்குப் புவான் சரினா அப்துல்லா தலைமையில் புகழ்மாலை சூட்டப்பட்டது.

1970 ஆம் ஆண்டுகளில் தமிழகம் சென்ற இயக்குனர் விஜயசிங்கம் தமிழ்த் திரைப்படம் ஒன்றைத் தயாரித்து இயக்கிய பின்னர் மலேசியாவில் தமிழ் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை மலேசிய மண்ணில் துவங்கினார்.

இயக்குனர் விஜயசிங்கம், நம் நாட்டில் 50க்கும் மேற்பட்ட தமிழ் நாடகங்களைத் தயாரித்து இயக்கி வழங்கியுள்ளார். பத்துக்கும் மேற்பட்ட மலாய் நாடகங்களை தயாரித்து இயக்கி அளித்துள்ளார். இதன் மூலம் நம் மலேசிய கலை ரசிகர்களுக்கு நல்லதொரு படைப்புகளை வழங்க வேண்டும் என்பது அன்னாரின் திரைப்பயணமாக இருந்துள்ளது. அதன் வழியாக மலேசிய நாட்டில் எண்ணற்றக் கலைஞர்களை உருவாக்கிய பெருமை அவரேயே சாரும்.

தேசிய நிலநிதி கூட்டுறவுச் சங்கத்தின் சார்பில் அவர் இயக்கிய சாணக்கிய சபதம் என்ற மேடை நாடகத்தை கோலாலம்பூர், சிரம்பான், ஈப்போ, பினாங்கு ஆகிய நகரங்களில் மேடை ஏற்றினார் என்பது அன்னாருக்கு கிடைத்த கூடுதல் சிறப்பு. இறுதியாக அவர் தன் நண்பர்களுடன் கூடி இயக்கிய ‘காதல் அது ரகசியமானது’ எனும் மலேசியத் தமிழ்த் திரைப்படம் அவரது புகழை உச்சத்திற்கு கொண்டு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.


உள்நாட்டு,வெளிநாட்டு கலைஞர்களின் மத்தியில் நன்கு அறிமுகமாக இயக்குநர் விஜயசிங்கத்திற்கு நடத்தப்பட்ட இந்த நினைவஞ்சலி கூட்டம் அன்னாரின் கலைத்துறைக்கு பெருமை சேர்த்தது என்றே கூறலாம். மலேசிய தமிழ்த் திரைப்பட நாடகத்துறையில் அவர் பெயர் என்றும் காலத்தால் அழியாமல் நிலைத்திருக்கும் என்று நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக்குழுத் தலைவர் சரினா அப்துல்லா புகழாரம் சூடினார்.

நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்ட தொழிலதிபர் டத்தோஸ்ரீ பர்கத் அலி இயக்குநர் விஜயசிங்கத்துடனான தனது 30 ஆண்டு கால நட்பை நினைவுக் கூர்ந்தார். தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் சார்பில் இயக்குநர் விஜயசிங்கத்தின் சாணக்கிய சபதம் எனும் மேடை நாடகத்தை குறித்தும் அவர் பேசினார்.
அந்நாடகத்தின் உருவாக்கம், கதாபாத்திரங்களின் நடிப்புத்திறமை என பல்வேறு அம்சங்கள் குறித்து பேசிய அவர், அந்நாடகத்தில் கதை, திரைக்கதை,வசனம்,இசை மற்றும் பாடல்கள் என பல்வேறு அம்சங்களை அமைத்து தந்தவரும் நினைவஞ்சலி கூட்ட ஏற்பாட்டாளர்களில் ஒருவருமான கலைஞர் ஷர்மாவை பாராடினார்.

அவரைத் தொடர்ந்து, பேசிய சமூக செயற்பாட்டாளர் முஜுபிர் ரஹ்மான் இயக்குநர் விஜயசிங்கத்தின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர்தம் அனைத்து படைப்புகளையும் பட்டியலிட்டு பேசினார்.
அவர்களைத்தொடர்ந்து ஹரிசரா புரொடக்ஷன்ஸ் சார்பில் கலந்து கொண்ட ஹாரிசாரா தேவா, இயக்குநருடனான தனக்கான அனுபவத்தை குறித்து பேசியதுடன் அவருக்கே உண்டான குரலில் ஓர் பாடலை பாடியும் அஞ்சலி செலுத்தினார். மலேசிய பயணம் எனும் இயக்கத்தின் தலைவர் மகேந்திரன் கலந்து கொண்டு இயக்குனருக்கு புகழஞ்சலி செலுத்தினார்.

மாலை ஏழு மணியளவில் துவங்கிய நினைவஞ்சலி கூட்டம் இரவு 9:30க்கு முடிவடையும் முன்னர் சாணக்கிய சபதம் என்ற மேடை நாடகத்தின் ஒரு சில காட்சிகள் திரையிடப்பட்டன. அந்நிகழ்ச்சியின் இறுதி அங்கமாக நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் இயக்குனர் விஜயசிங்கத்தின் படத்திற்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்ற முன்னாள் உறுப்பினர்கள் பேரவை பினாங்கு மாநிலத் தொடர்புக்குழுவின் சார்பில் தலைவர் ஜரீனா அப்துல்லா நன்றி கூறினார்.

 100 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *