English Tamil Malay
Spread the love

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதைமுன்னிட்டு அவருடைய அண்ணன் முத்துமீரா லெப்பை மரைக்காயரின் மகள் நசீமா மரைக்காயர் ராமேசுவரத்தில் அளித்த சிறப்பு பேட்டியில் அப்துல்கலாம் பற்றிய பல அரிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதை இங்கே காண்போம்.

கேள்வி: உங்கள் சித்தப்பாவை(அப்துல் கலாம்) பற்றி…?

பதில்: எங்கள் குடும்பத்தில் சித்தப்பாவுடன் அதிக நேரம் பேசியது நானாகத்தான் இருப்பேன். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாடல்களை அவர் விரும்பி கேட்பார். எந்தவொரு வேலையில் அவர் ஈடுபட்டு இருந்தாலும், மறுபுறம் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாடல் இசைத்துக்கொண்டிருக்கும்.

கேள்வி: அப்துல்கலாமுக்கு பிடித்த உணவு எது?

பதில்: ஊருக்கு வரும்போதெல்லாம் எங்களிடம் விரும்பி கேட்பது வெங்காய குழம்பு தான். அவர் ஒவ்வொரு முறையும் ஊருக்கு வந்த போதும் மதிய உணவுக்கு வெங்காய குழம்பு பிரதானமாக இருக்கும். அதேபோல பாசிப்பருப்பு மாவில் நெய்யும், சீனியும் கலந்த உருண்டையை மிகவும் ருசித்து சாப்பிடுவார்.

சித்தப்பாவுக்கு எல்லா விஷயத்திலும் ஆர்வம் உண்டு. அரசியல் குறித்தும் அவர் நன்கு தெரிந்திருந்தார். நாங்கள் ஏதாவது கேட்டால், “அரசியல்வாதிகள் அனைவருமே நல்லவங்கதான்” என்று கூறுவார். “எல்லாமே நல்லதாக நடக்கும்” என்பார். தமிழகத்தில் உள்ள அனைத்து தலைவர்களின் சாதனைகளையும் எடுத்துக்கூறுவார்.

எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்களின் சாதனைகளையும் எங்களிடம் கூறி இருக்கிறார். யார் மனதையும் கஷ்டப்படுத்த வேண்டும் என்று துளியும் நினைக்க மாட்டார்.

கேள்வி: கலாம் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?

பதில்: அவர் ஆராய்ச்சி மற்றும் பணியில் முழு ஈடுபாட்டுடன் இருந்தார். அவருக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எங்கள் பாட்டி மிகவும் விரும்பினார். எனக்கு விவரம் தெரிந்து 10 முறைக்கு மேல் பெண் பார்த்துள்ளனர். அதன் விவரத்தை வெளியூரில் வேலையில் இருக்கும் அவருக்கு கடிதத்தில் தெரிவித்தால், ‘வருகிறேன்’ என்று மட்டும் பதில் அனுப்புவார். ஆனால் அதன் பிறகு, “வேலை இருந்தது, அதனால் வரமுடியவில்லை” என்று கூறிவிடுவார்.

இருந்தாலும் பாட்டியும், எனது தந்தையாரும் அவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று மிகவும் விரும்பினர்.

கேள்வி: கலாம் விரும்பி படித்த புத்தகம் எது?

பதில்: சித்தப்பாவுக்கு புத்தகங்கள் படிப்பதில் அதிக ஆர்வம் உண்டு. குறிப்பாக சீகல் (கடல் பறவைகள்) என்ற புத்தகத்தை விரும்பி படிப்பார். அவர் ஊருக்கு வரும்போது அவரது பெட்டி முழுவதும் புத்தகங்களாக இருக்கும். அதிலும் இந்த புத்தகம் மேலாக வைக்கப்பட்டிருக்கும். ஜனாதிபதி, விஞ்ஞானி என பணியாற்றியிருந்தாலும் ஆசிரியர் பணிதான் அவருக்கு மிகவும் பிடிக்கும். அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணியாற்றினார். மாணவர்களுடன் உரையாடுவது அவருக்கு ரொம்ப பிடித்தமானது.

கேள்வி: அவரது வெற்றியை கொண்டாட விரும்பியது உண்டா?

பதில்: அக்னி ஏவுகணை சோதனை வெற்றியை கொண்டாட வேண்டும் என்று விரும்பினோம். அதுபற்றி அவரிடம் கூறியபோது, “அது அனைவரும் சேர்ந்து செய்த கூட்டு முயற்சி. அதனை நாடே கொண்டாடுகிறது. அதுவே மகிழ்ச்சியளிக்கிறது. தனியாக நான் மட்டும் கொண்டாட விருப்பமில்லை” என்று கூறிவிட்டார்.

தாய் நாட்டின் மீது அளவுகடந்த பற்று வைத்திருந்தார். அனைத்து வளங்களும் இந்தியாவில் இருக்கிறது. உலக நாடுகள் அனைத்திற்கும் நமது நாடு முன்னணி நாடாக விளங்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.

ஆராய்ச்சி துறையில் பணியாற்றியபோதும், ஜனாதிபதியாக இருந்தபோதிலும் என்னுடனும், எனது சகோதரருடனும் அடிக்கடி தொலைபேசியில் பேசுவார். ஒவ்வொரு முறையும் பேசும்போது தனது அண்ணன், முத்து மீரா மரைக்காயரின் உடல்நலம் குறித்து விசாரிக்காமல் இருந்தது இல்லை. வெளிநாடுகளுக்கு சென்றால் கூட எங்கள் வீட்டிற்கு போன் செய்து பேசுவார். அவரது பெயரில்தான் எங்கள் வீட்டில் தொலைபேசி இணைப்பே இருந்தது.

கேள்வி: அவருக்கு கோபம் வருமா?

பதில்: நான் சிறுவயது முதல் அவர் மறைந்த முதல் நாள் வரையிலும் அவருடன் பேசியிருக்கிறேன். அவர் யார் மீதும் எந்த விஷயத்துக்காகவும் கோபப்பட்டது கிடையாது. அனைவரிடமும் சிரித்த முகத்துடன் அன்பாக பேசுவார். ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் அவரது அண்ணனுக்கு உரிய மரியாதையை கொடுத்தார். நாங்கள் ஒருமுறை ஜனாதிபதி மாளிகைக்கு சென்றிருந்தோம். வந்திருப்பது தனது அண்ணன் என தெரிந்ததும் எழுந்து நின்று மரியாதை கொடுத்தார். அங்கு அவர் ஆசையாக எங்களுக்கு சுற்றி காண்பித்தது நூலகத்தைத்தான்.

கேள்வி: ஊருக்கு வந்த போது அவர் வாங்கி வந்தது என்ன?

பதில்: அவர் ஒவ்வொரு முறையும் ஊருக்கு வந்தபோது அவரின் அண்ணனுக்கு வேஷ்டி சட்டை வாங்கி வருவார். எனக்கு புத்தகங்களையே பரிசாக தந்திருக்கிறார். அவர் கடைசியாக தந்தது “யு ஆர் யுனிக்யு” என்ற அவர் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தைத்தான்.

குழந்தைகளை கண்டால் அவர்களுடன்தான் முதலில் பேசுவார். நகைச்சுவை உணர்வு அவருக்கு அதிகம். குழந்தைகளுடன் சிரித்து விளையாடுவார். எனது தந்தையுடன் சேர்ந்து தொழுகை நடத்துவார். வெள்ளிக்கிழமை என்றால் பள்ளிவாசலுக்கு சென்று தொழுகையில் கலந்து கொள்வார்.

விளையாட்டு, கலாசாரம், அரசியல் உள்பட அனைத்து துறைகளிலும் அவர் கவனம் செலுத்துவார். டி.வி.யில் கிரிக்கெட் ஓடிக்கொண்டிருந்தால் ஸ்கோர் என்ன? என்று கேட்பார். எப்பவுமே மனதில் நல்லதை மட்டுமே நினைக்க வேண்டும் என்று கூறுவார். எதிர்மறையான விஷயங்களை அவர் எப்போதும் ஏற்றுக்கொள்ளமாட்டார். பல திருக்குறள்களை கூறி அதன் பொருளையும் சொல்லித்தந்தார்.

கேள்வி: அப்துல் கலாம் உங்களிடம் கடைசியாக பேசியது என்ன?

பதில்: அவர் மரணம் அடைவதற்கு முதல் நாள் என்னிடம் போனில் பேசியபோது, நான் ஒரு இடத்துக்கு செல்கிறேன். அங்கிருந்து என்னால் பேசமுடியாது என்று மட்டும் கூறினார். அவர் சொன்னது போலவே அதன் பிறகு அவர் பேசவே இல்லை. எங்கள் சித்தப்பா ஒட்டுமொத்த உலக மக்களையும் கவர்ந்தார். அவரை போன்ற மாமனிதரை இனி பார்க்க முடியுமா? என்பது தெரியவில்லை. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *