English Tamil Malay


பிறந்த நாள் கட்டுரை.

(கரிகாலன்)
                                                                                    தமிழ்த் திரைப்பட உலகின் முதல் பின்னணிப் பாடகர் என்றப்  பெருமையை ஈன்றிருக்கும் பழம்பெரு பாடகர் திருச்சி எஸ்.லோகநாதனின் மூத்தப் புதல்வரான டி.எல்.மகராஜன்’, தனது தந்தை வழியில்  இசைஞானம் பெற்ற பின்னணிப் பாடகராவார். இவர் அக்கால நகைச்சுவை நடிகை சி.டி.ராஜகாந்தம் என்பவரின் பேரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1954 ஆம் ஆண்டில் மார்ச் திங்கள் 9 ஆம் நாள் திருச்சி லோகநாதன் – ராஜலக்‌ஷ்மி*  தம்பதியருக்கு மூத்தப் புதல்வராகப் பிறந்த மகராஜன், தனது 10 வது வயதிலேயே ‘வள்ளலார்’ என்ற நாடகத்தில் முதன் முதலாகப் பாடி நடித்து பின்னர் தனது 12வதுவயதில் பிரபல இயக்குநர் ஏ.பி.நாகராஜனின் ‘திருவருட் செல்வர்’ (1967) படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் டி.எம்.சௌந்திரராஜனுடன் இணைந்து, “காதலாகிக் கசிந்து” என்னும் பாடலைப் பாடி பிரபலமானார்.
டி.எல்.மகராஜன் திரைப் பாடல்களைக் காட்டிலும் ஏராளமான பக்திப் பாடல்களைப் பாடியிருக்கிறார். இவரின் பக்திப் பாடல்கள் அடங்கிய ஒலி நாடாக்களும் குறு வட்டுகளும் நிறைய வெளி வந்திருக்கின்றன. திரைப் படப் பாடல்களைப் பொறுத்த மட்டிலும், 1980 ஆம் ஆண்டில் கவிஞர்  புரட்சிதாசன் கதை வசனம் பாடல்களை இயற்றி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்திருந்த ‘நான் போட்ட சவால்’* (1980) படத்தில் இளையராஜா இசையில், இவர் பாடிய “நெஞ்சே உன் ஆசை என்ன” என்றப் பாடல் சிறந்ததொரு எழுச்சிப் பாடலாகப் புகழ் பெற்றது.

இதனைத் தவிர்த்து, இவர் பாடிய மேலும் சிலப் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன. “உன்னை கேளாய்” (தேசம்) *”முன்னேறுதான்”* (இந்திரா), “காதல் யோகி” (தாளம்), “நீ கட்டும் சேலை” (புதிய மன்னர்கள்), “கொட்டி” (அண்ணன் என்னடா தம்பி என்னடா), “அயே சம்பா” (பாண்டவர் பூமி), “மச்சினிக்கு” (பூவே உனக்காக), “ஆலமர” மற்றும் “பூந்தேரில்” (பெரிய மருது), *”வந்தவனெல்லாம்”*
(கருமையில் ஓர் அழகு), *”கார்த்திகை மாதம்”(இருமுடி), “பக் பக் பக்” (பார்த்திபன் கனவு), “மேரே பியாரி” (இன்று போய் நாளை வா), “வாடி வாடி முயலே” ( அந்த நாள் ஞாபகம்), *”ரெட்ட ஜடை ராக்கம்மா”*(அன்பே அன்பே), “பூவாட்டம்”* (அரவிந்தன்), “செவ்வானமே”* (நல்லதொரு குடும்பம்), “நினைத்தால்”*(உன் கையில் குரோதம்), “அவன் பாதி”*(அவன் இவன்), “மார்கழிப் பூக்களே” ( அவன் அவள் அது), “அந்தி மழை மேகம்”* (நாயகன்) போன்ற நினைவில் நிற்கும் பாடல்களையும் டி.எல்.மகராஜன் தனது ரசிகர்களுக்கு விருந்தாகப் படைத்திருக்கிறார்.
டி.எல்.மகாராஜனுக்கு திருமணமாகி நிர்மலாதேவி என்ற மனைவியும், ஆதிலட்சுமி என்ற மகளும் உள்ளனர். திரைப்படங்களில் பாடுகின்ற வாய்ப்புகள் படிப் படியாக இவருக்கு குறைந்து விட்ட போதிலும், அவ்வப்போது மேடை இசை நிகழ்ச்சிகளிலும் கச்சேரிகளிலும் இவர் பங்கேற்று தனது இசையாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். இடையிடையே தொலைக்காட்சிகளின் இசை நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இவர் பங்கேற்று வருவதை இன்றும் காண முடியும்.

டி.எல்.மகராஜனின் இளைய சகோதரர்  தீபன் சக்கரவர்த்தி இசைத் துறையில் இவரைக் காட்டிலும் சற்று பிரபலமானவர். இவர் ஒரு நடிகராகவும், புகழ் பெற்ற பலப் பாடல்களைப் பாடியிருக்கும் பின்னணிப் பாடகராகவும் தன்னை நிலை நாட்டிக் கொண்டவர். இவரின் மற்றொரு சகோதரரான் டி.எல்.தியாகராஜன் இவ்விருவரைப் போன்று புகழ் பெற இயலாவிட்டாலும் இவர் *‘பொம்பள மனசு’* என்ற படத்தில், ரத்தின சூரியன் என்பவர் இசையில்*”அமுத மழை பொழியும் முழு நிலவிலே”* என்றப் பாடலைப் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 48 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *