English Tamil Malay

மலேசிய நண்பனுக்கு எதிராக போலீஸ் புகார்-பொன்.வேதமூர்த்தி

கோலாலம்பூர், அக்.18:
தன்னுடைய நற்பெயரைக் கெடுக்கும் விதமாக இட்டுக்கட்டிய அவதூறு அறிக்கைகளை வெளியிட்டுவரும் மலேசிய நண்பன் நாளேட்டிற்கும் அதன் இயக்குநர்களுக்கும் எதிராக போலீஸ் புகார் செய்வதாக மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தலைவர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மலேசிய நண்பன் நாளேடு தனக்கு எதிராக குற்றவியல் அவதூறுகளை வெளியிடும் வேலையை அண்மைய நாட்களாக மீண்டும் தொடங்கி உள்ளதுடன் சரிபார்க்கப்படாத, தீய எண்ணம் கொண்ட சொந்த அறிக்கைகளை புனைந்து வெளியிடுவதுடன் தனக்கு எதிரான சதி நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது.

தற்போதைய அமைச்சர் ஹலிமாவின் பொறுப்பில் உள்ள மித்ரா நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டு அதில் பெருமளவு மஇகா தலைவர்களுக்கு வாரி வழங்கப்பட்டுள்ளதாக பரவலாக கூறப்படுவதன் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியது அனைவரும் அறிந்த உண்மை. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஹலிமா நேரடியாக பதில் சொல்வதை விடுத்து 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளுக்கான மித்ரா நிதியில் நான் அதிகமாக பயன்படுத்தி விட்டதாக பொய்யான குற்றச்சாட்டை நாடாளுமன்றத்தில் ஹலிமா சுமத்தினார்.

இதனால், ஒற்றுமைத் துறையின் தற்போதைய அமைச்சர் ஹலிமாவின் பொறுப்பில் இருக்கும் மித்ரா நிதி அதிக அளவில் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ள தகவல் பொதுமக்களின் கவனத்தை பேரளவில் ஈர்த்தது.

மலேசிய நண்பன் நாளேடு இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு முன்னாள் அமைச்சரான தன் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வருகிறது. இது, கிரிமினல் அவதூறைத் தவிர வேறில்லை.

தற்போதைய சூழலில் என் நலனில் அக்கறை கொண்டவர்கள், மலேசிய நண்பனின் தவறான அறிக்கைகளால் திசைதிருப்பப்பட்டவர்கள் என ஏராளமானானோர் என்னுடன் தொடர்ந்து தொலைபேசிவழி தொடர்பு கொண்டு வருகின்றனர். அவர்கள் அனைவரையும் அமைதிகாக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

நான் எப்பொழுதும் சட்டத்தை மதித்து நடந்துகொள்வதால் என்னுடைய நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் மலேசிய நண்பனுக்கும் அதன் இயக்குநர்களுக்கும் எதிராக கிரிமினல் பீனல் கோட் 499-ஆவது பிரிவின்கீழ் இன்று போலீஸ் புகார் செய்வதாக முன்னாள் அமைச்சரும் செனட்டருமான பொன்.வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

 24 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *