English Tamil Malay

திரு. குமணன் கணேசன் அவர்கள் 6.6.1970-ல் பிறந்தவர். கெடா சுங்கைப்பட்டாணி இப்ராஹிம் தேசியப் பள்ளியில் தனது ஆரம்பக்கல்வியைத் தொடர்ந்தார். தொடர்ந்து பினாங்கு தாசேக் குளுகோர் தேசியப் பள்ளியிலும், கெடா பாடாங் செரய், பெர்மாத்தாங் தோக் டிக் தேசியப் பள்ளியிலும் பயின்றார்.

படிவம் 1 முதல் படிவம் 6 வரை பாடாங் செராய் இடைநிலைப் பள்ளியில் கல்வியைத் தொடர்ந்தார். இவருக்கு ஆசிரியர் பயிற்சியை மேற்கொள்ள தலைநகர் சிறப்பு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் (MPIK) ஆங்கில மொழியியலில் பயிற்சிப் பெற வாய்ப்புக் கிடைத்தது. மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் (USM) வரலாறு மற்றும் மலாய் இலக்கியத்தில் தனது பட்டப்படிப்பினை முடித்தவுடன், மலேசிய கல்வி அமைச்சு மற்றும் அமெரிக்க விளையாட்டு பல்கலைக்கழகத்தின் இரட்டைத் திட்டக் கல்வியில் சேர்ந்து உடலியல் மற்றும் பயிற்றுனர் துறையில் பயிற்சிப் பெற்றார்.

பணி அனுபவம்

எஸ்.டி.பி.எம் (STPM) முடித்தவுடன் அதன் முடிவு வரும்வரை வெறுமனே இல்லாமல் மலேசியாவில் பிரசித்திப்பெற்ற “ஸ்டார்” நாளிதழில் புகைப்படக் கலைஞராக பணியைத் துவங்கினார். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து பயில்வதற்கு முன்பு பினாங்கு மலாக்கோஃப் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றியிருக்கின்றார். தலைநகரில் கம்போங் பாரு தேசியப்பள்ளி, கிளாந்தான் குவால கெராய் தேசியப்பள்ளி (6 ஆண்டுகள்), பினாங்கு தாசேக் குளுகோர் பாடாங் மெனாரா தேசியப் பள்ளி, பெனாந்தி தேசியப் பள்ளி, குவா பெராஹு தேசியப் பள்ளி, பெர்மாத்தாங் தோக் கண்டு தேசியப் பள்ளி, பிறை தோட்டத் தமிழ்ப்பள்ளி மற்றும் தற்போது JURU தோட்டத் தமிழ்ப்பள்ளி என கடந்த 26 ஆண்டுகளாக பல பள்ளிகளில் திரு. குமணன் கனேசன் அவர்கள் தனது சேவையை வழங்கியுள்ளார்.

விளையாட்டுத் துறை ஈடுபாடும் அடைவு நிலையும்

விளையாட்டுத் துறையிலும் போட்டி விளையாட்டுகளிலும் தகுதிச் சான்றிதழ் பெற்ற திரு. குமணன் கணேசன் பல் வகை திறன் பெற்றவர். ஓட்டப்பந்தயத் துறை, காற்பந்து, கிரிக்கெட், ரக்பி, போன்றவற்றில் தேசிய ரீதியிலான பயிற்றுனர் சான்றிதழைப் பெற்று பல்வேறு நிலைகளில் சேவையாற்றிவருகிறார். ரக்பி, அம்பு எய்தல், போவ்லிங் போன்ற விளையாட்டுகளில் மாணவர்களைப் பயிற்றுவித்து மாநில மற்றும் தேசிய நிலையில் அவர்கள் சாதனைப் புரிய பயிற்சியளித்துள்ளார். 1995 முதல் கிளந்தான், பினாங்கு கிரிக்கெட் குழுவினர் தேசிய நிலையில் வெற்றி பெற முதன்மை பயிற்றுனராக செயலாற்றியவர் திரு குமணன் கணேசன். சிறுவர்களை விளையாட்டுத் துறை ஈடுபடுத்த அவர்களைப் பயிற்றுவிக்கும் தகுதிச் சான்றிதழையும் இவர் பெற்றுள்ளார் ( IAAF KIDS ATHLETICS LECTURER ).

புத்தாக்க திட்டங்கள்

பள்ளி வானொலித் திட்டம் இவர் சிந்தனையில் உருவான ஒரு மாபெரும் புத்தாக்கத் திட்டமாகும். புத்தாக்க நிலையில், பிரத்தியேக சிந்தனையோடு, ஆர்வமிக்க நிலையில் பள்ளியில் உருவாக்கி சாதனை புரிந்துள்ளார். 21-ஆம் நூற்றாண்டு கல்வியியலின் கீழ் மின்னியல் பசுமை தள வகுப்பறையை பள்ளியில் அமைத்து மாணவர்களை மின்னியல் வழி கற்றல் நடவடிக்கையில் ஈடுபடுத்தி அவர்களை திறன் மிக்கவர்களாக உருவாக்கியுள்ளார்.

எழுத்து மற்றும் பதிப்புத்துறை

மலேசியாவில் கல்வித்துறையில் எல்லோருக்கும் மிக அறிமுகமான எழுத்தாளர் திரு. குமணன் கணேசன் அவர்கள். யூ.பி.எஸ்.ஆர் ஆங்கிலப் பாடத்தில் நிபுணத்துவம் பெற்ற இவர் கடந்த 20 ஆண்டுகளாக ‘தி எடுகேட்டர்” (THE EDUCATOR) கல்வி இதழ் வழி ஆங்கில மொழியில் புலமைப் பெறவும், தேர்வில் சிறப்பான புள்ளிகளைப் பெறவும், தனது எழுத்தின் வழி வழிகாட்டி வருகின்றார். யு.பி.எஸ்.ஆர் ஆங்கில மொழி பாட வழி காட்டி நூல், கையேடுகள், வெளியீடுகள் ஆகியவற்றை பதிப்பிப்பதோடு அதனை முகநூல், புலனம், தொலைவரி, மின்னியல் வழியும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பகிர்ந்து வருகிறார்.

வலை ஒளி (YOUTUBER / SOCIAL SERVICE)

தனக்கென தனி ஒரு வலையொளியை உருவாக்கி, மாணவர்கள் ஆசிரியர்கள் பயன் பெற வேண்டி, கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு உகந்த பயிற்றுத்துணைப் பொருள்கள் உருவாக்கி ஒளியேற்றி வருகிறார். அதோடு நாடு முழுமையிலும் நேரடியாகச் சென்று இலவசமாகப் பயிற்சிப் பட்டறை, வழிகாட்டி கருத்தரங்கு போன்றவற்றை தனி நபராகவும், தனியார் மற்றும் சமூக இயக்கங்களோடு சேர்ந்து வழங்கி வருகிறார்.

 119 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *