English Tamil Malay


கோலாலம்பூர் செ -1
14 மணி நேரம் இடைவிடாமல் நிகழ் நிலையில் சிலம்ப வகுப்பை நடத்தி மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சிலம்ப பயிற்சியாளரான கவியரசி சங்கர், தற்போது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற திட்டம் கொண்டுள்ளார்.

இந்நிலையில் சிலம்ப வகுப்பில் பெரிய அளவில் பங்கு பெற்றதற்கான பதிவு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இதுவரை இடம்பெறவில்லை என்பது ஆன்லைன் மூலம் தாம் தெரிந்து கொண்டதாக கவியரசி கூறினார்.

ஆகையால் தாம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற இதுவே சரியான தருணம் என தாம் கருதுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

” அதிகமானோர் சிலம்பக் கலையை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே என் வாழ்நாள் கனவு. இந்த கலையை நான் நேசிப்பது போல் இவர்களும் நேசிக்க வேண்டும் என்பது எனது விருப்பமாகும் ” என்றார் அவர்.

மலேசியாவில் சிலம்பக்கலை நூறு ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. ஆனால் சீலாட் மற்றும் தெக்குவான்டோ போல் அதிகமானோருக்கு சிலம்பக் கலையை பற்றி தெரிவதில்லை என அவர் குறிப்பிட்டார்.

மலேசிய சாதனைப் புத்தகத்தில் தாம் இடம்பெற்றதால் இந்தக் கலையை கற்றுக்கொள்ள அதிகமானோருக்கு ஒரு தூண்டுதலாக இருக்கும் என தாம் கருதுவதாக 27 வயதுடைய கெடாவை சேர்ந்த கவியரசி குறிப்பிட்டார்.
” 8 வயது முதல் சிலம்பக்கலை மீது எனக்கு மிகுந்த ஆர்வம் இருந்து வந்தது. நானும் எனது குடும்பத்தினரும் சுக்மா,சீ விளையாட்டு மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை தொலைக்காட்சியில் ஆர்வமாக கண்டு களிப்போம். இதன் மூலம் தான் சிலம்பக் கலையின் மகிமை எனக்கு தெரியவந்தது ” என்றார் அவர்.

இதனைத் தொடர்ந்து நமது பள்ளியின் புறப்பாட நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக சிலம்பு வகுப்புகளில் உடனடியாக தான் கலந்துகொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது மாஸ்டர் அன்பரசன் மற்றும் மாஸ்டர் அன்பழகன் தலைமையின் கீழ் மலேசிய கோர்வை சிலம்ப சங்கத்தின் கீழ் சிலம்ப பயிற்சி தாம் நடத்திவருவதாக கவியரசி தெரிவித்தார்.

 308 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *