English Tamil Malay

நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஆளுநர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தமிழகமக்களுக்கு எனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்நாளில், காலனிஆதிக்க அடக்குமுறையில் இருந்துநமது நாட்டை மீட்க உயிர்த்தியாகங்கள் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நாம் வீர வணக்கம் செலுத்துவோம்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடி கொண்டிருக்கும் இவ்வேளையில் நம் நாடு நோய், பசி இல்லாத, பசுமை, வளமை மிகுந்த நாடாகவும், அனைவருக்கும் அனைத்தும்தடையின்றி கிடைப்பதற்கு வழிவகை செய்யும் நாடாகவும் அமைய வேண்டுமென வாழ்த்துகிறேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: 136 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் அரசமைப்பு சட்டத்தின்படி ஆட்சிநடைபெறவும், மகாத்மா காந்தி,ஜவஹர்லால் நேரு, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோர் பின்பற்றிய கொள்கைகளை பரப்பும் வகையிலும் 75-வது சுதந்திர தின விழாவை நன்றிப் பெருக்கோடு அனைவரும் கொண்டாட வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்த நாம், வறுமையிலிருந்தும் விடுதலை அடைய வேண்டும். அனைவருக்கும் கவுரவமான வேலை, அடித்தட்டு மக்களுக்கு சமூகநீதி, அனைவருக்கும் சமமான கல்வி ஆகியவை நிறைந்த சமத்துவ நாட்டை உருவாக்க கடுமையாக உழைப்பதற்கு இந்நாளில் நாம் உறுதியேற்க வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் இரா.முத்தரசன்: நாடு முழுவதும் 75 -வது சுதந்திர தினவிழா கொண்டாடும் இனிய தருணத்தில், விடுதலைப் போராட்டத்தில் சொல்லவொணாத் துயரங்களை தாங்கியும், கொடிய அடக்குமுறைகளை எதிர்கொண்டும், தூக்கு மேடையிலும், சிறைக் கொட்டடியிலும் உயிர் தியாகம் செய்தவிடுதலைப் போராட்ட வீரர்களின் உணர்வுகளையும், நினைவுகளையும் நெஞ்சில் ஏந்தி, அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: நம் நாட்டின் சுதந்திரத்துக்காக வித்திட்டு, பாடுபட்டு, உயிர்த்தியாகம் செய்த தியாகிகள், வீரர்கள் உள்ளிட்ட அனைவரையும் நினைத்து, மரியாதை செய்து, அவர்கள் பெற்றுத்தந்த விடுதலையைப் பேணிப் பாதுகாக்க சபதம் ஏற்போம்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: வரும் காலங்களில் நமதுநாட்டில் அமைதியும், முன்னேற்றமும் ஏற்பட்டு, வறுமை ஒழிந்திடஇந்த சுதந்திர தினம் வழிவகுக்கட்டும். இந்நாளில் உலகெங்கும் வாழும் இந்தியர்களுக்கு சுதந்திரதின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 318 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *