English Tamil Malay

தொகுப்பு : பினாங்கு கரிகாலன்

காலங்கள் உருண்டோடி விட்ட நிலையிலும், மலேசிய மண்ணின் ஈடு இணையற்ற கால்பந்து வீரர் என்றப் பெருமையுடன், ஆயிரமாயிரம் ரசிகர்களின் நெஞ்சங்களில் என்றென்றும் வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஆர்.ஆறுமுகம், சரித்திரம் படைத்த ஒரு சாகச விளையாட்டாளராக வற்றாப் புகழுடன் நீடித்திருப்பதில் என்றென்றும் ஐயமில்லை.

ஆர். ஆறுமுகம் மலேசியா, சிலாங்கூர், போர்ட் கிள்ளானில், 1953 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 31 ஆம் நாளன்றுப் பிறந்தவர் ஆவார். அவர் மலேசியத் திருநாட்டின் மிகப் பிரபலமான கால்பந்து வீரராக முத்திரப் பதித்தவர். ‘சிலந்தி வீரன்’ (Spiderman) என்ற சிறப்புப் பெயர் அவருக்குண்டு. அவர் தனது இரும்புக் கரங்களால் காற்பந்து உலகில், சிறந்த கால்பந்து காவலராக இன்று வரையில் புகழப்படுகிறார்.

ஆசிய, ஒலிம்பிக் விளையாட்டுகளில் கால்பந்து துறையில், மலேசிய நாட்டை முன்னிலைப் படுத்திய பெருமைக்குரியவர் ஆறுமுகம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. கால்பந்துத் துறையில் அவர் நிகழ்த்தியிருக்கும் அபார சாதனைகளை நினைவிற் கொண்டு, அவருடைய மகத்தான சாகசத்திற்கு,மலேசிய அரசாங்கம், ’டத்தோ’ விருதை வழங்கி கௌரவித்திருக்கிறது.

அனைத்துலக ரீதியிலும் தேசிய அளவிலும் மிகவும் புகழ்ப் பெற்றவராக ஆறுமுகம் திகழ்ந்து வந்த போதிலும், அனைவரிடத்திலும் பணிவுடன் நடந்து கொண்ட நற்பெயரையும் அவர் ஈன்றவர். இயல்பாகவே அவர் மிக எளிமையான குணம் கொண்டவராக விளங்கியவர்.

ஆர். ஆறுமுகம் இளம் வயதிலேயே கால்பந்து விளையாட்டில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். 1971ஆம் ஆண்டு தன்னுடைய 18ஆவது வயதில் அவர் முதன் முதலாக சிலாங்கூர் கால்பந்து கழகத்தைப் பிரதிநிதித்து, ’பர்ன்லி’ கோப்பைப் போட்டியில் (Burnley Cup Youth Tournament) கலந்து கொண்டார். அதுதான் கால்பந்துத் துறையில் அவருடைய முதல் பங்கெடுப்பு ஆகும். அதன் பின்னர் அடுத்தடுத்து பல உள்ளூர், தேசியப் போட்டிகளில் பங்குப் பெற்று, புகழின் உச்சத்தை அடைந்தார்.

1972லிருந்து 1988 வரையில், சிலாங்கூர் கால்பந்துக் கழகத்தின் விளையாட்டு வீரராக மலேசியக் கோப்பைப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடினார்.  1973ஆம் ஆண்டு மலேசியத் தேசியக் கால்பந்து குழுவில் அவர் இடம் பெற்றார். தென்கொரியா, சியோலில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டிகளில் அவர் மலேசியாவைப் பிரதிநிதித்து விளையாடினார்.

மலேசியாவில் மெர்டேக்கா கிண்ண கால்பந்துப் போட்டி மிகவும் பிரபலமாக விளங்கிய ஒரு காலம் உண்டு. ஆண்டுதோறும் நடைபெற்று வந்த அப்போட்டியில்,ஆசியாவில் உள்ள பல நாடுகள் கலந்து கொண்டு விளையாடி வந்தன. உலகத் தரம் வாய்ந்த அந்தப் போட்டிகளில், 1973, 1974, 1976, 1979 ஆம் ஆகிய ஆண்டுகளில், மலேசியா வெற்றி வாகை சூடி கோப்பையை வெல்வதற்கு, ஆறுமுகம் முக்கியப் பங்காற்றினார். தென்கிழக்காசிய விளையாட்டுகளில், (Sea Games) 1973, 1975, 1977, 1979, 1981, 1983. 1985 ஆம் ஆகிய ஆண்டுகளில் அவர் மலேசியக் கால்பந்துக் குழுவைப் பிரதிநித்து விளையாடினார். 1974 ஆம் ஆண்டு தெஹ்ரானில் நடைபெற்ற, ஆசியவிளையாட்டுகளில், மலேசியா வெண்கலப் பதக்கம் பெற்றதில் ஆர். ஆறுமுகம் தீவிர முனைப்புக் காட்டினார்.

1980 ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில், மலேசியா தேர்வு பெறுவதற்கு, அவரது முக்கியப் பங்களிப்பு புகழ்ந்து கூறப்பட்டது. ஆனால், அமெரிக்காவை ஆதரித்துப் பல நாடுகள் அந்த ஒலிம்பிக் போட்டியைப் புறக்கணிப்பு செய்தன. அவற்றில் மலேசியாவும் ஒரு நாடாக அடங்கியது.

1986 ஆம் ஆண்டு கால்பந்து விளையாட்டுத் துறையிலிருந்து ‘சிலந்தி வீரன்’ ஆறுமுகம் ஓய்வு பெற்றார். ஓய்வு பெறும்போது அவர் 196 அனைத்துலக விளையாட்டுகளில் கலந்து கொண்டு சாதனைப் படைத்தவர் என்று பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டார். ஆர். ஆறுமுகம் கால்பந்து விளையாட்டையும் தாண்டி, சேவைத் திறன் கொண்டவராகவும் தன்னை அடையாளப்படுத்தினார்.

தம் இருப்பிடப் பகுதியில் வாழ்ந்த இளைஞர்களை ஒன்று திரட்டி, Starbrite SC எனும் கால்பந்துக் குழுவை அவர் உருவாக்கினார். பல இளைஞர்களைத் தொழில் ரீதியான விளையாட்டாளர்களாக மாற்றியப் பெருமையை ஈன்றார்.

அவர் தனது 35 ஆவது வயதில், 1988 ஆம் வருடம் டிசம்பர் திங்கள் 18 ஆம் தேதி, மலேசியா,பெட்டாலிங் ஜெயா நகரில் நிகழ்ந்த ஒரு கார் விபத்தில் அகால மரணம் அடைந்தார். அவருடைய மரணம் மலேசியக் கால்பந்து விளையாட்டுப் பிரியர்களை

அதிர்ச்சியில் உறையச் செய்தது. அவருடைய இறுதிச் சடங்கில் இனம், மொழி, சமயப் பாகுபாடின்றி, பல்லாயிரக்கணக்கான மலேசியர்களும், கால்பந்து lரசிகர்களும் திரளாகக் கலந்து கொண்டு அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அவருடைய இறப்பு மலேசிய இந்தியர்களுக்கு மட்டுமல்லாது அனைத்து மலேசியர்களுக்கும், குறிப்பாகக் கால்பந்துப் பிரியர்களுக்கு ஒரு பேரிழப்பாக  வருணிக்கப்பட்டது. அவருடைய அந்த அபார விளையாட்டுத் திறமையை மலேசிய நாட்டில் இதுவரையில் எவரும் நிகழ்த்தவில்லை.

அவருக்கு ’மரியா செல்வி’ என்ற மனைவியும் சுபா, ரூபா என இரு மகள்களும் உள்ளனர். அவர் பணிபுரிந்த ‘பப்ளிக்’ வங்கியும், சிலாங்கூர் கால்பந்து சங்கமும் இணைந்து, 1989-இல் அவருடையப் பெயரில் ஓர் அற நிதியத்தை உருவாக்கியது.

மலேசியாவில், இந்திய இளைஞர்களை ஒன்று திரட்டி அவர்களுக்குக் கால்பந்துபயிற்சிகளையும், அதன் விளையாட்டு நுணுக்கங்களையும் ஆறுமுகம் கற்றுக் கொடுத்தார். அதனால் அவரை ”கால்பந்தின் சகாப்தம்” என்று இதுவரையிலும் மலேசிய மக்கள் புகழாரம் சூட்டிப் பாராட்டி வருகின்றனர். டத்தோ ஆறுமுகம் தேசிய ரீதியில் பெருவாரியான மக்களின் அன்பைப் பெற்றவராக அழியாப் புகழுடன் ஆயிரமாயிரம் ரசிகர்களின் அகங்களில் ஒளிர்வது திண்ணம். அன்னாரின் ‘நினைவு நாள்’ இன்று.

 436 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *