English Tamil Malay

சென்னை மே 29-அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (உத்தமம்) நிறுவனத் தலைவருமான பேராசிரியர் மு.ஆனந்தகிருஷ்ணன் இன்று காலை தமிழ்நாட்டின் சென்னையில் காலமானார்.

தமிழ்த் தொழில்நுட்ப வளர்ச்சியில் பல்வேறு மாறுபட்ட முயற்சிகளையும் அணுகுமுறைகளையும் நெறிப்படுத்தி ஒன்றிணைப்பதில் மிகப் பெரிய பங்கினை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆற்றிவந்தவர் பேராசிரியர் ஆனந்தகிருஷ்ணன். வெவ்வேறு கருத்துக்களைக் கொண்ட தொழிநுட்பர்களையும் ஆர்வலர்களையும் அவர் ஒரு குடையின்கீழ்க் கொண்டுவந்தார்.

இவரது தலைமையின் கீழ் தான் தமிழ்99 விசைமுக அமைப்புமுறையின் தரநிலை வரையறுக்கப்பட்டது. தமிழை முதல் மொழியாகப் பயன்படுத்தும் பயனர்கள், தமிழ் எழுத்துகளைத் தட்டெழுதுவதற்கான நிலையான விசைப்பலகையாகத் தமிழ்99 இன்று மாறியுள்ளது.

இதேபோல், தமிழ்க் குறியீட்டுத் தரங்களின் எதிர்காலம் குறித்த பல்வேறு கருத்துகளைக் கொண்டிருந்தவர்களை ஒன்று கூட்டி, ஒருமைப்படுத்தப்பட்ட குறியீட்டு வடிவத்தை ஏற்கச் செய்ததும் பேராசிரியர் அவர்களே.

“பேராசிரியர் ஆனந்தகிருஷ்ணன், உலகெங்கிலும் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் எவ்வாறு ஒன்றிணைந்து செயலாற்றலாம் என்பதற்கான முன்மாதிரியான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தினார். அவர் தமது தனிப்பட்ட விருப்பங்களை ஒதுக்கி வைத்து, வெவ்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக அமர்ந்து, சிக்கல்களுக்குத் தீர்வுகளைக் காண வழிவகுத்தார். அவரிடம் இருந்து நாங்கள் கற்றுக்கொண்டவை கணக்கில. அவரின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு!”, என்று கூறினார், செல்லினத்தின் நிறுவனரும் பேராசிரியரோடு உத்தமம் அமைப்பைத் தோற்றுவித்தவர்களில் ஒருவருமான முத்து நெடுமாறன். பேராசிரியரின் குடும்பத்தாருக்கும் அவர் மறைவால் வாடும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கும் நண்பர்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார்.

நன்றி செல்லினம்

 668 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *