பினாங்கு பிப்ரவரி 11- பினாங்கு தண்ணீர் மலை ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்துக்குச் செல்லும் எல்லாத் திசைகளும் “வேல் வேல்”, “வெற்றி வேல்”, “வேல் வேல் வெற்றி வேல்”, “வேல் வேல் வீரவேல்” என்ற பரவச முழக்கத்தால் அதிர்ந்தது என அலைஒளி செய்தியாளர் பிரான்சிஸ் சத்தியா தெரிவித்துள்ளார்.
நேற்று காலை, தண்ணீர் மலைக்கு பவனியாக சென்ற தங்க ரதமும் வெள்ளி ரதமும் இரவு நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்களின் பக்திப் பரவசத்துடன் ஆலயத்தை வந்தடைந்தன. ரத ஊர்வலம் சென்ற வழியெங்கும் பக்தர்கள் ஆயிரக்கணக்கான தேங்காய்களை உடைத்து தங்கள் காணிக்கையையும் வேண்டுதல்களையும் அர்ப்பணித்தனர்.
பால்குடம் எடுக்கும் பக்தர்களின் பக்தி பேரொளி
அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், மஞ்சள் நிற ஆடை அணிந்து, பால்குடங்கள் ஏந்தி ‘வேல் வேல்’ என முருகப்பெருமானின் திருநாமத்தை ஜபிக்கும்படி தண்ணீர் மலை உச்சியை நோக்கி பக்தியோடு வழிநடந்தனர். அவர்களுடன் குடும்ப உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் என எண்ணற்றோர் கைவிரல்களை இணைத்து பக்தியுடன் பயணித்தனர்.
நூற்றுக்கணக்கான அலங்கரிக்கப்பட்ட வண்ணக் காவடிகளை ஏந்திய பக்தர்கள், மூன்று கிலோ மீட்டர் தூரத்திலிருந்து தண்ணீர் மலை கோயிலை நோக்கி நடந்தனர்.
முழு பக்தி உற்சாகத்தில் தைப்பூச உற்சவம்
காவடி எடுத்துச் செல்லும் பக்தர்களுக்காக உருமிமேள இசைக் குழுவினர், வெள்ளி விழாவை ஒட்டும் இசையோடு பக்தி ஆனந்தத்தை அதிகரித்தனர்.
இரண்டரை நூற்றாண்டுகளாக கொண்டாடப்பட்டு வரும் பினாங்கு தைப்பூசத்திருவிழா, இந்த ஆண்டும் பன்னாட்டு கவனத்தை பெற்றது. வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தைப்பூச திருவிழாவை காண வந்திருந்தனர்.
அந்தப் பக்தி பெருவிழாவைக் கண்டு லண்டனிலிருந்து தனது மனைவியுடன் பினாங்கு வந்திருந்த ஹென்றி கெண்ட்,
“இந்த மாதிரியான திருவிழாவைப் பார்த்ததே இல்லை. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தியில் பூரித்துச் செல்லும் இந்தக் காட்சி எனக்கு வியப்பூட்டுகிறது. இந்த நாளில் இங்கு வந்தது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுகிறேன்,” என்று அலைஒளி செய்தியாளரிடம் கருத்து தெரிவித்தார்.
236 ஆண்டுகளாக தொடரும் திருவிழா
“கடந்த 236 ஆண்டுகளாக, தைப்பூசம் நம் நாட்டில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்ற 20க்கும் அதிகமான நாடுகளில் ஆண்டுதோறும் இந்த விழா கோலாகலமாக நடைபெறுகிறது” என்று திருவிழாவின் போது ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.
பக்தர்களுக்கு இலவச சேவைகள்
கடுமையான வெயில் நிலவிய நிலையில், தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றி திரும்பிய பக்தர்களுக்கும், அவர்களுடன் வந்த குடும்ப உறவுகளுக்கும், பொதுமக்களுக்கும் தொண்டூழியர்கள் **அமைத்திருந்த பந்தல்களில் இருந்து குளிர்ந்த நீரும், மதிய உணவும் வழங்கினர்