English Tamil Malay

அகல்யா
கோலாலம்பூர், டிச.11 –
இன்றைய நிலையில், மாணவர்கள் பயிலும் அனைத்துப் பாடங்களிலும் உயர்நிலைச் சிந்தனைத் திறன் முக்கிய கற்றல் கற்பித்தல் கூறுகளில் ஒன்றாக இடம்பெற்று வருவதை நாம் அறிவோம். அந்த வகையில், நம் குழந்தைகளின் உயர்நிலைச் சிந்தனைத் திறன் ஆளுமையைக் கண்டறியும் தேசிய நிலையிலான உயர்நிலைச் சிந்தனைத் திறன் புதிர்ப்போட்டியை இல்ஹாம் கல்வி கழகம் – டத்தோ ஸ்ரீ ஆறுமுகம் அறவாரியத்தின் ஆதரவில் கடந்த டிசம்பர் 7-ஆம் நாள், சனிக்கிழமை மலேசிய கல்வி அமைச்சின் அனுமதியுடன் ஏற்பாடு செய்திருந்தது.

பெட்டாலிங் ஜெயாவிலுள்ள, Brickfields ஆசியக் கல்லூரியில் அப்போட்டி நடைபெற்ற நிலையில், நாடு முழுவதுமிருந்து 85 மாணவர்கள் அதில் கலந்து கொண்டனர். இப்போட்டியின் தொடக்கச் சுற்று இயங்கலையில் நடைபெற்ற வேளையில், அதில் பங்கெடுத்த 500 மாணவர்களில் அதிக புள்ளிகளைப் பெற்ற 85 மாணவர்கள் இறுதிச் சுற்றில் களம் இறங்கினர்.

2024 தேசிய நிலையிலான உயர்நிலைச் சிந்தனை திறன் புதிர்ப்போட்டியில் பேராக், சித்தியவான் மகா கணேச வித்தியாசாலை மாணவர் தி. தேசிகன் கணித மேதை இராமானுஜம் விருதினை வென்றார். அவருக்கு ஆயிரம் ரிங்கிட் ரொக்கம், வெற்றிக் கிண்ணம், நற்சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. வேளாண் அறிவியலாளர் எம்எஸ் சுவாமிநாதன் விருதினை Haji Manan தமிழ்ப்பள்ளி மாணவர் , எஸ். கவீஷன் பெற்ற வேளை இயற்பியல் விஞ்ஞானி எஸ்என் போஸ் விருதினை வென்றார் Mak Mandin தமிழ்ப்பள்ளி மாணவி, ஆர். மலர்விழி. இருவருக்கும் முறையே 750, 500 ரிங்கிட் ரொக்கம், வெற்றிக் கிண்ணம், நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

நான்காம் நிலையிலிருந்து 10-ஆம் நிலை வரை வாகை சூடிய மாணவர்களுக்கு 50 ரிங்கிட் ரொக்கம், வெற்றிக் கிண்ணம், நற்சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

Kluang, Haji Manan தமிழ்ப்பள்ளி மாணவர் அறுவர் இறுதிச் சுற்றில் களமிறங்கி; அவர்களில் மூவர் முதல் 10 இடங்களில் வாகை சூடிய நிலையில், அப்பள்ளி திரட்டுப் புள்ளிகள் அடிப்படையில் APJ அப்துல் கலாம் சுழற்கிண்ணத்தை வென்றது.

புதிர்போட்டியின் நிறைவு விழாவில், நாடறிந்த கல்வியாளர் , காலஞ்சென்ற, கு. நாராயணசாமியின் பெயரில், ‘நற்சேவையாளர் விருது’ , அறிமுகப்படுத்தப்பட்டு, அவ்விருது கல்வித்துறையில், குறிப்பாக, கல்வி – தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் , தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ள பேராக், செலாமா தமிழ்ப்பள்ளி தொழில்நுட்ப ஆசிரியர், ரூபன் ஆறுமுகத்திற்கு வழங்கி , சிறப்பு செய்யப்பட்டது.

மலாயாப் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளரும், கல்வியமைச்சின், தமிழ்மொழிக் காப்பக முன்னாள் துணைத்தலைவருமான, கு. நாராயணசாமி, மலேசியக் கல்வித் துறைக்கு ஆற்றிய பெரும்பங்கை சிறப்பிக்கும் வகையில் , இந்த விருது , அறிமுகம் செய்யப்பட்டது. இனி, ஒவ்வோர் ஆண்டும் , இந்த விருது வழங்கப்படும்.

இதனிடையே, இறுதிச் சுற்றில் பங்குகொண்ட மாணவர்கள் அனைவருக்கும் அவர்களின் அடைநிலையின் அடிப்படையில் வெள்ளி – வெண்கலப் பதக்கங்களும் நற்சான்றிதழும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

இவ்விழாவில் பெற்றோர்களிடம் கலந்துரையாடிய நாடறிந்த செய்தியாளர் முனைவர் மு. சங்கர், இன்று உயர் நிலை சிந்தனைத் திறன் உலகை ஆளும் சிந்தனைத் திறனாக உருப்பெற்றுள்ளதாக தெரிவித்தார். ஒரு சிக்கலைத் தீர்க்க, முடிவெடுக்க, புத்தாக்கங்களைப் பெற, புதுப்புனைவுகளைச் செய்ய, அறிவாற்றல் திறன் ஆகியவற்றை ஒருங்கிணைத்து நடைமுறைப்படுத்துவதே உயர் நிலை சிந்தனைத் திறன் எனப்படுவதாகவும் அவர் பகிர்ந்து கொண்டார். மு. சங்கர் தனது முனைவர் படிப்படிப்பு ஆய்வுக்கு உயர் நிலை சிந்தனைத் திறன் குறித்த ஆய்வினை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இல்ஹாம் கல்விக் கழகத்தின் தொடர் நடவடிக்கைகள் குறித்த விபரங்களை Persatuan Pendidikan Ilham என்ற முகநூல் பக்கத்திலும் ilham.org.my என்ற அகப்பக்கத்தின் வழியும் அறிந்து கொள்ளலாம்.

 21 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *