அகல்யா
பினாங்கு, நவ.01 –
பினாங்கு மாநில உழவாரப் படையினர் கெடா மாநில கோல மூடா, யான் மாவட்டத் தமிழ்ப்பள்ளிகளின் ஒருமைப்பாட்டுக் கழகத்துடன் இணைந்து பீடோங் தமிழ்ப்பள்ளியில் ஆத்திசூடி, உலகநீதி, திருக்குறள் போட்டியை நடத்தினர்
ஆத்திசூடி, உலகநீதி, திருக்குறள் வகுப்பு மாணவர்களின் சிந்தனைக்கு மிக அவசியமானது என்று கல்வியாளர் முனியாண்டி கூறினார்.
அண்மையில் கெடா மாநில, கோல மூடா, யான் மாவட்டத் தமிழ்ப்பள்ளிகளின் ஒருமைப்பாட்டுக் கழகமும் பினாங்கு மாநில உழவாரப் படையினரும் ஆத்திசூடி, உலகநீதி, திருக்குறள் போட்டியைப் பீடோங் தமிழ்ப்பள்ளியில் நடத்தியதில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்போட்டியில் கோல மூடா, யான் மாவட்டத்திலிருக்கும் 23 பள்ளிகளிலிருந்து ஒன்றாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரையில் 135 மாணவர்கள் பங்கு கொண்டனர்.
கோல மூடா, யான் மாவட்டத் தமிழ்ப்பள்ளிகளின் ஒருமைப்பாட்டுக் கழகத்தின் தலைவரும் பீடோங் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியருமான ஐயா அ.இரவி தலைமையில் இந்நிகழ்ச்சி நடந்தேறியது. இப்போட்டியின் முழுச் செலவையும் தொழில் முனைவர் ஐயா வீ.பிரகலாதன் ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவருக்கு ஏற்பாட்டுக் குழுவினரின் சார்பில் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்கள். இப்போட்டிக்குப் பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் அமைப்பாளர் திரு. இரா.காளிதாஸ் தலைமையில் மேலும் ஐவர் நடுவர்களாகப் பணியாற்றினர்.
இந்நிகழ்ச்சியைக் கெடா மாநில, கல்வி இலாகாவின் பாலர்ப்பள்ளி ஆரம்பப்பள்ளி உதவி இயக்குநர் சு.நாகேந்திரன் உரையாற்றி, வெற்றி பெற்ற மாணவ மணிகளுக்குப் பரிசுகளை எடுத்து வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். அவர் தமது உரையில் பல நூற்றாண்டுகள் கடந்தும் தமிழ்ச் சான்றோர்களை இது போன்ற மேடைகளில் நாம் பேசுவது அவர்கள் விட்டுச் சென்ற அந்த இலக்கியங்களின் அல்லது சிந்தனையின் பெருமையே ஆகும் என்று எடுத்துரைத்தார். அவற்றைத் தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டியது நமது கடமைகளுல் மிக முதன்மையானது என்றும் வலியுறுத்தினார்.
போட்டியில் பங்கு பெற்ற மாணவர்கள் அனைவரும் பங்கேற்புச் சான்றிதழையும் ‘பூமித் தாயும் நானும்’ என்னும் நூலையும் அன்பளிப்பாகப் பெற்றனர். மேலும் ஒவ்வொரு பள்ளி நூலகத்திற்கும் ஒரு நூல் அன்பளிப்புச் செய்யப்பட்டது. நிகழ்ச்சியை மெருகூட்டப் பீடோங் தமிழ்ப்பள்ளியின் மாணவர்கள் இரு பண்பாட்டு நடனங்களையும் படைத்தனர். நிகழ்ச்சி பீடோங் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியை மு.கீத்தா நன்றியுரையோடு இனிதே முடித்து வைத்தார்.
19 total views, 1 views today