(ர.நவநீத கிருஷ்ணன்)
சுபாங் செப் 6-2024 ஆம் ஆண்டு முழுவதும் 65 லட்சம் பயணிகளை கொண்டு செல்ல பாத்திக் ஏர் இலக்கை கொண்டுள்ளதாக அந்த விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
இந்த நிலையில் இவ்வாண்டில் ஆக 31 ஆம் தேதி வரை 43 லட்சம் பயணிகளை பாத்திக் ஏர் கொண்டுச் சென்றுள்ளதாக அண்மையில் வழங்கிய பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு முழுவதும் 42 லட்சம் பணிகளை இந்த விமான நிறுவனம் கொண்டு சென்றுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
தற்போது 21 நாடுகளுக்கு வாரத்திற்கு 800 விமான சேவைகளை பாத்திக் ஏர் மேற்கொண்டு வருகிறது.
மலேசியா மட்டுமின்றி தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆசிய பசிபிக் நாடுகளுக்கு பாத்திக் ஏர் தனது விமான சேவைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறது.
ஆசியானில் மலேசியா உட்பட இந்தோனேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகளுக்கு பாத்திக் ஏர் சிறகடிக்கிறது.
இந்தியாவில் திருச்சி, பெங்களூரு, கொச்சின், மும்பை, புது டில்லி மற்றும் அமிர்தரஸ் ஆகிய நாடுகளுக்கு பாத்திக் ஏர் தனது சேவையை மேற்கொண்டு வருகிறது.

தென்னிந்தியாவில் கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்களுக்கு சிறகடிக்க இந்திய விமான போக்குவரத்து அமைச்சின் அனுமதிக்காக தாங்கள் காத்திருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
சீனாவில் செங்டு,குவாங்சாவ், குயிலின்,ஹய்காவ்,குன்மிங்,ஜாங்ஜி,செங்ஜாவ் ஆகிய நகர்களுக்கு பாத்திக் ஏர் சிறகடித்து வருகிறது.சிங்கப்பூர் விமான நிறுவனத்தின் வழிமுறைகளை கற்றுக் கொண்டோம்….!!!
விமான போக்குவரத்து துறையில் வெற்றி கண்டுள்ள சிங்கப்பூர் விமான நிறுவனத்தில் வழிமுறையை பாத்திக் ஏர் கற்றுக் கொண்டதாக டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
சுமார் 50 லட்சம் மக்கள் தொகையை கொண்ட சிங்கப்பூரில் அந்நாட்டு விமான நிறுவனமான சிங்கப்பூர் விமான நிறுவனம் வெற்றி நடை போட்டு வருகிறது.

சிங்கப்பூர் விமான நிறுவனத்தின் துணை நிறுவனமான ஸ்கூட் விமான நிறுவனம், 240 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட இந்தோனேசியாவில் அங்குள்ள அனைத்து நகரங்களுக்கும் சிறகடித்து வருகிறது.
இதன் வழி சிங்கப்பூர் விமான நிறுவனம் வான் போக்குவரத்து துறையில் வெற்றி நடை போட்டு வருகிறது.
இந்த வழிமுறையை பின்பற்றி இந்தோனேசியாவின் பாத்திக் ஏர் விமான நிறுவனத்துடன் பாத்திக் ஏர் கைகோர்த்த தாக அவர் தெரிவித்தார்.

இந்த வகையில் கேஏல்ஐஏ-வை ஒரு இடமாற்று மையமாக கொண்டு இந்தோனேசியாவின் ஹாஜ் யாத்திரை பயணிகளை ஜெட்டாவுக்கு கொண்டு செல்வதில் பாத்திக் ஏர் வெற்றி கண்டுள்ளது.
இந்தோனேசியாவின் ஜக்கார்த்தா,சுராபாயா மற்றும் சுமாத்ரா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஹாஜ் யாத்திரை பயணிகள் கேஎல்ஐஏ வழி தான்
ஜெட்டாவுக்கு சொல்கின்றனர்.

இவர்களில் அதிகமான பயணிகள் கோலாலம்பூரில் ஒரு நாள் சுற்று பயணத்தை முடித்துக் கொண்டு மறுநாள் ஜெட்டாவுக்கு பயணத்தை மேற்கொள்கின்றனர். இது மலேசியா சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு உதவி வருகிறது.
புவியியல் ரீதியில் இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையே மலேசியா அமைந்துள்ளதால், கேஎல்ஐ அனைத்துலக விமான நிலையம் இடமாற்ற மையத்திற்கு பொருத்தமான ஒன்று என அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த சூழலை சாதகமாக பயன்படுத்தி இதர நாடுகளுக்கு தனது விமான சேவையை பாத்திக் ஏர் மேலும் விரிவு படுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அடுத்த 3 ஆண்டுகளில்…….!!
அடுத்த 3 ஆண்டுகளில் பாத்திக் ஏர் விமான நிறுவனத்தை வலிமையான நிலைக்கு கொண்டு செல்ல தாம் திட்டம் கொண்டுள்ளதாக டத்தோ சந்திரன் ராம மூர்த்தி குறிப்பிட்டார்.
தற்போது 46 போயிங் ரக விமானங்களைக் கொண்டு பாத்திக் ஏர் வெற்றி நடை போட்டு வருகிறது.
அடுத்த 3 ஆண்டுகளில் 60 விமானங்களாக அதிகரிக்க தாம் திட்டம் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வரும் மூன்று ஆண்டுகளில் இன்னும் பல நாடுகளுக்கு மற்றும் நகரங்களுக்கு தனது விமான சேவையை விஸ்தரிக்க பாத்திக் ஏர் வியூகங்களை வகுத்து வரும் என்றார் அவர்.
மலேசியாவில் விமான போக்குவரத்து துறைக்கு பாத்திக் ஏரின் பங்களிப்பு முக்கியமாக இருந்து வருகிறது.
நாட்டின் சுற்றுலா துறைக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் பாத்திக் ஏர் முக்கிய பங்காற்றி வருகிறது என்பதில் சந்தேகமில்லை.
பாத்திக் ஏர் மலேசியா விமான நிறுவனத்தில் சுமார் 3000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
விமானிகள், பொறியாளர்கள், சிப்பந்திகள் உட்பட்ட இவர்களில் 99% விழுக்காட்டினர் மலேசியர்கள் என அவர் சுட்டிக்காட்டினார்.
இவர்கள் அனைவருக்கும் தங்களின் தொழில்களுக்கு ஏற்ப நியாயமான ஊதியங்கள் வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
எனது இந்த வெற்றிக்கு என் தாயே முன்னோடி…..!!!
இன்று தமது இந்த நிலைக்கு தமது தாயாரே முன்னோடி என அவர் பெருமிதம் கொண்டார்.
‘எனது குடும்பத்தில் நாங்கள் மொத்தம் ஐந்து பேர். நான் தான் முதலாவது பிள்ளை. எனக்கு இரண்டு சகோதரிகள் இரு சகோதரர்கள். சகோதரிகள் ஒருவர் காலமாகிவிட்டார்’ என்றார் அவர்.
இந்த நிலையில் கல்வியில் தாம் சிறந்த விளங்க வேண்டும் என்பதே தமது தாயாரின் ஆவா.
‘நான் டிப்ளோமா படிப்பை முடிக்க வேண்டும், அதன் பின் டிக்ரி(முதுகலை) வரை படிக்க வேண்டும் என அவ்வப்போது என் தாயார் என்னிடம் கூறி வருவார்.டிக்ரி என்றால் என்ன என்று தெரியாவிட்டாலும், ஒரு தாயாரின் எதிர்பார்ப்பு அது வாக இருந்தது.
எனது தாயாரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப முதுகலையில் முதல் நிலையில் தேர்ச்சி பெற்று என் தாயாரை மனம் குளிர வைத்தேன்’ என அவர் குறிப்பிட்டார்.தமக்கு மனைவி மற்றும் நான்கு பிள்ளைகள் இருப்பதாக அவர் சொன்னார்.
32 total views, 1 views today