மலேசியத் தமிழ் விடிவெள்ளிக் கற்பனையாற்றல் கழகத்தின் ஏற்பாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக சிறுவர் சிறுகதை எழுதும் போட்டி நடத்தப்பட்டது. நாட்டிலுள்ள 250 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இப்போட்டிக்காகப் படைப்புகளை அனுப்பி வைத்திருந்தார்கள். அவற்றிலிருந்து 28 சிறந்த சிறுகதைகளை எழுதிய மாணவர்கள் இறுதி சுற்றுக்குத் தேர்வாகி நேரலையில் சிறுகதை எழுத வைக்கப்பட்டனர்.
மாணவர்களின் கற்பனையாற்றலையும் மொழியாற்றலையும் மேம்படுத்தும் நோக்கத்தோடு நடத்தப்பட்ட இச்சிறுகதைப் போட்டியில் பங்கெடுத்த 28 மாணவர்களுக்கும் கடந்த 08.06.2024ஆம் நாளில் சுங்கை சிப்புட்டிலுள்ள தேசிய வகை ஈவுட் தமிழ்ப்பள்ளியில் பரிசளிப்பு விழா நடத்தப்பட்டது. நாடு தழுவிய நிலையில் நடத்தப்பட்ட இப்பரிசளிப்பு விழாவிற்கு ஜொகூர், பேரா, கெடா, பினாங்கு, மலாக்கா, கோலாலம்பூர், சிலாங்கூர் என்று பல மாநிலங்களிலிருந்து வெற்றியாளர்கள் நேரில் வந்து கலந்து கொண்டனர்.
மேனாள் மலேசியத் தேர்வு வாரியத் தமிழ்ப்பிரிவின் உதவி இயக்குநரும் இலக்கியகம் என்கிற அமைப்பின் தோற்றுநருமான ஐயா திரு.பி.எம் மூர்த்தி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் இப்போட்டிக்குத் தலைமை நடுவராகவும் அவர் செயலாற்றினார்.
மேலும், ஈவுட் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியரான திருமதி பொன்னுமணி அவர்களும் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தங்கள் பள்ளியில் முதன்முறையாக இதுபோன்ற இலக்கிய நிகழ்ச்சி நடப்பதாக அவருடைய உரையிலும் குறிப்பிட்டார்.
தலைமை நடுவர் உரையில் திரு,பி.எம் மூர்த்தி அவர்கள் சிறுவர்கள் இலக்கியம் படைக்கத் துவங்கியிருப்பதைப் பெற்றோர்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் அவர்கள் தனித்துவமான கற்பனைவளம் கொண்டிருப்பதால் வீடுகளில் மதிக்கப்பட வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுப் பேசினார். பின்னர், போட்டிக்கு வந்த சிறுகதைகளில் உள்ள அடிப்படை சிக்கல்களையும் சிறப்புகளையும் தொகுத்துக் கூறினார்.
இந்நாட்டில் தமிழ்ச் சிறார் இலக்கியம் வளர வேண்டும் என்கிற நோக்கத்திற்காக மட்டுமே தமிழாசிரியர்கள் சிலர் இணைந்து இப்போட்டியை தொடர்ந்து ஐந்தாண்டுகளாக ஏற்பாடு செய்து வருவதாக மலேசியத் தமிழ் விடிவெள்ளிக் கற்பனையாற்றல் கழகத்தின் தலைவரும் ஆசிரியரும் எழுத்தாளருமான கே.பாலமுருகன் அவர்கள் தமது தலைமை உரையில் தெரிவித்துக் கொண்டார்.
பல இடையூறுகள் இருப்பினும் இந்நாட்டின் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான இலக்கியக் களத்தினைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சியாக ஒவ்வொரு வருடமும் இப்போட்டி நடத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார். தங்கள் கழகத்தின் உறுப்பினர்களான ஆசிரியர்கள் திருமதி இந்துமதி, திருமதி கற்பகம், திருமதி சசிகலா, திரு.ப்ருத்திவிராஜு, திருமதி கலைமலர், திரு.முனியாண்டி, திரு.ராம், திருமதி சந்திரா, திருமதி உஷா, திருமதி பனிமலர், திருமதி நிர்மலா தேவி ஆகியோருக்குத் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
தேசிய நிலையிலான சிறுவர் சிறுகதைப் போட்டியின் முதல் நிலை வெற்றியாளராக கெடா மாநிலத்தைச் சேர்ந்த சரஸ்வதி தமிழ்ப்பள்ளி மாணவர் செ.உதயவாணன் அவர்கள் தெரிவாகியிருந்தார். இரண்டாம் நிலையில் டெங்கில் தமிழ்ப்பள்ளி மாணவி யஸ்மித்தா மோகன் அவர்களும் மூன்றாம் நிலையில் தான் ஸ்ரீ டத்தோ மாணிக்கவாசகம் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவி மீசா ஜெயராமன் அவர்களும் வெற்றிப்பெற்றிருந்தனர்.
அதே போல நான்காம் நிலையில் ஜாலான் ஹஜி மனான் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ருவனேஷ் ராம் ராமமூர்த்தி அவர்களும் ஐந்தாம் நிலையில் சியாலாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவர் விஸ்வா பழனிகுமார் அவர்களும் ஆறாம் நிலையில் தாமான் கெளாடி தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவர் கிஷோர் குணசீலன் அவர்களும் வெற்றிப்பெற்றிருந்தனர்.
மேலும் வெற்றிப்பெற்ற மாணவர்களின் பட்டியல் பின்வருமாறு:
ஏழாம் நிலை: சிவ
ஜதனேஸ்வரர் விஜயகுமாரன், சிகாம்புட் தமிழ்ப்பள்ளி
எட்டாம் நிலை: குருமிதன் கார்த்திகேசன், புக்கிட் ரெங்கம் தமிழ்ப்பள்ளி
ஒன்பதாம் நிலை: ஆர்யன் யோகேஸ்வரன், சுங்கை சோ தமிழ்ப்பள்ளி
பத்தாம் நிலை: கோசிகன்
மோகன், டெங்கில் தமிழ்ப்பள்ளி
ஆறுதல் பரிசுகள்:
கயல்விழி சுப்ரமணியம், ஜாலான் ஹஜி மனான் தமிழ்ப்பள்ளி
மோகன யாழ்னி
சுப்ரமணியம், பேராங் நதி தோட்டத் தமிழ்ப்பள்ளி
வைனீஸ்வரி கோபாலன், நீலாய் தமிழ்ப்பள்ளி
வைத்தீஸ்வரி ரவீந்திரன், டெங்கில் தமிழ்ப்பள்ளி
கவிஷ்னா ஸ்ரீநிவாசகம், துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி
லித்திக்கா ஸ்ரீ நாதன், வேஸ்ட் கண்ட்ரி (மேற்கு) தமிழ்ப்பள்ளிஜஸ்விந்த் ராஜ் சிவம், துன் டாக்டர் இஸ்மாயில் தமிழ்ப்பள்ளி
மாதங்கி துரைராஜு, டாருலாமான் தமிழ்ப்பள்ளி
ஷஷ்விகன் பழனிவேலன், குவாலா குபு பாரு தமிழ்ப்பள்ளி
ஷரன்ராஜ் விஸ்வநாதன், மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி
வெற்றிவேல் ஜெயகணேஷ், அலோர் காஜா தமிழ்ப்பள்ளி
வர்ஷா அன்பழகன், நோர்த் ஹம்மோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி
நங்கை உதயகுமார், எமரல்ட் தமிழ்ப்பள்ளி
பவதாரணி அழகேந்திதன், கோப்பேங் தமிழ்ப்பள்ளி
திவ்யாஷினி தங்கத்துரை, புக்கிட் டாரா தமிழ்ப்பள்ளி
கிரிஷேந்திரன் பூபாலன், அலோர் காஜா தமிழ்ப்பள்ளி
துர்காஷினி சந்திரன், டெங்கில் தமிழ்ப்பள்ளி
சர்வேஷினி புஸ்பநாதன், ஆர்வார்ட் பிரிவு 3 தமிழ்ப்பள்ளி
மாணவர்கள் அனைவருக்கும் பரிசுக் கோப்பைகளும் நற்சான்றிதழும் வழங்கப்பட்டன.
மேலும், பத்து நிலைகள் வரை பெற்ற மாணவர்களுக்கு ரொக்கத் தொகையும் வழங்கப்பட்டன. அதே நிகழ்ச்சியில் எழுத்தாளர் கே.பாலமுருகன் அவர்களின் கைவண்ணத்தில் உருவான ‘உயாங் மலை’ என்கிற சிறார் நாவலும் அறிமுகம் கண்டது. எழுத்தாளர் காந்தி முருகன் அவர்கள் தமிழில் வெளிவந்திருக்கும் சிறப்பான சூழலியல் நாவல் என்று அப்படைப்பைப் பாராட்டி அறிமுகவுரை வழங்கினார். வந்திருந்த மாணவர்கள் ஆர்வத்துடன் கே.பாலமுருகனின் சிறார் நாவலை வாங்கிக் கொண்டனர்.
சிறார் நாவல் வாசிப்பு படைப்பாற்றலையும் கற்பனையாற்றலையும் வளர்க்கும் நல்ல உத்தியாகும். அடுத்த தலைமுறையில் நாவல் எழுதக்கூடிய சிறார்கள் உருவாக வேண்டும் என்பதே தம்முடைய இலக்கு எனத் தம் ஏற்புரையில் கே.பாலமுருகன் தெரிவித்தார்.
116 total views, 1 views today