தேசிய வகை மாக் மண்டின் தமிழ்ப்பள்ளிசுழற் கிண்ணத்தை வென்றது.
பிறை ஜூன்15-பிறை, ஜாலான் பாரு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் ஏற்பாட்டில் நடந்த பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான 5 – ஆவது இந்து சமயப் புதிர்ப் போட்டி வெகு சிறப்பாக ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பிறை, ஜாலான்பாரு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் தலைவர் மேஜர் சேகரன் அவர்கள் தலைமையேற்றார்.
பினாங்கு மாநிலத்தில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகள் இந்து சமயப் புதிர்ப் போட்டியில் கலந்துகொண்டதாக ஜாலான் பாரு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் கல்வி மற்றும் சமயப் பிரிவுக்கான தலைவரும் முன்னாள் தலைமையாசிரியருமான இராஜ மாணிக்கம் தெரிவித்தார்.
கடந்த 2012 -ஆம் ஆண்டு முதல் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கான கல்வி மற்றும் இந்து சமய நடவடிக்கைகளுக்கு, பிறை ஜாலான்பாரு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம் RM 1.5 மில்லியனுக்கு மேல் செலவிட்டுள்ளது என்றும்,இதில் தமிழ்ப்பள்ளிகளில் போதிக்கும் சமய ஆசிரியர்களுக்குப் படித் தொகை மற்றும் சமயப் பாடத் திட்டத்திற்கான நூல் ஆகியவை தயார் செய்ததில் அந்த நிதி ஒதுக்கீடு அடங்கும் என்றார் அவர்.
இந்து சமயப் பாடத் திட்டத்தினை பினாங்கு மாநிலத்தில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளிலும் பிறை ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம் ஏற்று நடத்த ஒத்துழைப்பு வழங்கி வரும் எல்லா தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், சமயப் பாட நூல்களை வடிவமைத்து, அச்சிட்டுக் கொடுத்த மலேசிய இந்து தர்ம மாமன்றத்திற்கும் அவர் நன்றி பாராட்டினார்.
இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த இந்து சமயப் புதிர்ப் போட்டியில் மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதுடன்,ஆலய நிர்வாகம் இது போன்ற இந்து மக்களுக்கான சமய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தும் எனத் தெரிவித்தார் ஆலயத்தின் தலைவரான மேஜர் சேகரன்.
இந்து சமய பாடப் போதனையைத் தமிழ்ப்பள்ளிகளில் நடத்தும் திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுத்த ஆலய அறங்காவலர் குழுத் தலைவர் டத்தோ ஸ்ரீ் ந.கோபாலகிருஷணன் அவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்து சமயப் புதிர்ப் போட்டியில் முதல் பிரிவில் பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளியும்,இரண்டாம் பிரிவில் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் வெற்றி வாகை சூடினர்.
சமயப் புதிர்ப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும் சுழற் கேடயமும் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளைத் தெ லைட் ( The Light ) தங்கும் விடுதியின் நிறுவனர் டான் ஸ்ரீ இரமேஸ் அவர்கள் எடுத்து வழங்கினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் நாடறிந்த வழக்கறிஞரான உயர்திரு ஆதிமூலன் அவர்கள் கல்வி மற்றும் கட்டொழுங்கு எனும் தலைப்பில் மாணவர்களிடையே உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
188 total views, 1 views today
சிறப்பான செய்தி நன்றாக இருந்தது.